கேள்வி: பலரின் கேள்விகளுக்கு புரிந்து கொள்ளும்படி பதில் கூறுவது இல்லை? ஏன்
இறைவனின் கருணையை கொண்டு இத்தருணம் கூறுவது யாதெனில் வருகின்ற மனிதன் புரிந்து கொள்ளும்படியாக கூறினால் என்ன? என்றால். அப்படிக் கூறினாலும் கூட புரிந்து கொள்ள மறுப்பதும் அல்லது அந்த நிலை வாக்கை நாங்கள் ஏற்கவில்லை என்ற ரீதியில் விவாதம் செய்வதும் அல்லது அனைத்தையும் தாண்டி இவைகளை போய் என்று கூறுவதும் மனிதனின் இயல்பு. இந்த இயல்பை அறிந்தேதான் யாம் காலாகாலம் இதுபோல் அருள் வாக்கினை கூறி வருகிறோம். இயம்புங்கால் மேலும் இதுபோல் நிலையிலே தெள்ளத் தெளிவாக வெட்ட வெளிச்சமாக எதைக் கூற வேண்டும்? எதைக் கூறக்கூடாது? என்ற இறை கட்டளைக்கேற்பவே கூற வேண்டி இருக்கிறது. உதாரணமாக இப்படி கூறுவதாக வைத்துக் கொண்டால் அதனை ஏற்று அமைதி அடையக்கூடிய பக்குவம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும் என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. இப்படியிருக்கும் பட்சத்தில் முன்னரே பக்குவமின்மையோ விதியோ அல்லது அறியாமையோ துன்பத்தில் வந்து எம்முன்னே வந்து அமருகின்ற மனிதனுக்கு யாமும் ஒரு விதமான வாக்கை கூறி அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஒன்று மௌனமாகி விடுகின்றோம். இல்லையென்றால் அவன் திருப்தி அடையும் வண்ணம் கூறி விடுகிறோம். இப்படி கூறுவதால் அடுத்த வினா வரும். சித்தர்கள் பொய் உரைக்கலாமா? என்று ஏற்கனவே நாங்கள் பொய்தான் உரைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது போல் நிலையிலேயே பொய்மையும் வாய்மையிடத்து என்ற கருத்தை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.
அதுபோல் மெயிலும் மெய்யை நாங்கள் கூற வேண்டும் என்றால் இங்கு வருபவன் மெய்யாக இருக்க வேண்டும் இங்கு வருபவன் யாரும் மெய்யாக இல்லை என்பதே மெய்யிலும் மெய்யான உண்மையாகும் அதாவது எம்மை நாடுவதும் என் மீது பற்று வைப்பதும் பக்தி வைப்பதும் என்பது வேறு ஆனால் நாங்கள் வந்து வாக்கை கூறுகிறோம் என்பதற்காக எல்லா வகை உரிமைகளையும் எடுத்துக் கொண்டு நான் எதிர்பார்க்கின்ற சூழலை அமைத்துத் தந்தால் தான் நம்புவேன் என்ற ரீதியில் வந்தால் இன்றல்ல நாளையல்ல கலப்பக்கூடி காலமானாலும் சித்தர்களும் மனிதர்களும் சரி விகித சமரச உடன்பாடு என்றுமே வராது இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எப்பொழுதும் மேலும் இது போன்ற சிக்கலான தத்துவார்த்த கருத்துக்களை கூறினால் மீண்டும் மீண்டும் குழப்பங்கள் பொருளைத்தான் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும்
அடுத்ததாக இதுபோல் நிலையிலேயே பல்வேறு விதமான சிந்தனைகள் கொண்டவர்கள் இங்கு வருவதும் போவதும் பின்னர் தூற்றுவதும் என்பது இயல்பு. இது காலாகாலம் நடக்கக்கூடிய நிகழ்வு. இதற்காக இதழ் ஓதுபவனோ மற்றவர்களோ விசனம் கொள்வதும் வேதனை கொள்வதும் அறிவுடைமை ஆகாது. ஒருவன் முதலில் இங்கு வருவான். இதை நம்புவான். எம்மை தலையை தூக்கி வைத்துக் கொண்டாடுவான். அடுத்த சில மாதங்களில் கீழே போட்டு மிதிப்பான். இவையும் நடந்து கொண்டுதான் இருக்கும். இது போன்ற மனிதர்களை மனதிலே வைத்து எந்த ஒரு காரியத்தையும் செய்தல் கூடாது. எனவே வருபவர் வரட்டும் செல்பவர் செல்லட்டும் ஒத்துக் கொள்ளக் கூடிய மனித ஒத்துக் கொள்ளட்டும். மறுக்கக்கூடிய மனிதன் மறுக்கட்டும். ஆனாலும் கூட இது போல் நிலையிலேயே இன்னும் எத்தனை கடினங்கள் எத்தனை வேதனைகளை அனுபவித்தாலும் இது போல் நிலையிலேயே தர்மம் சத்தியம் பக்தி இந்த மூன்றையும் தவறாமல் கடைபிடிப்பேன் என்ற ஒரு வைராக்கியம் இருப்பவனுக்குத்தான் தொடர்ந்து எமது வழிகாட்டுதல் என்பதும் இருக்கும் தொடரும். இன்னொன்று இதுபோல் விபத்தை முன்கூட்டியே உணர்ந்து சிலரை காப்பாற்றுவது போல பலரை ஏன் காப்பாற்றவில்லை? என்ற ஒரு வினா வரும். அடுத்ததாக அப்படியானால் அகத்தியரை வணங்கினால் அல்லது மற்ற சித்தர்களை நம்பினால்தான் காப்பாற்றுவார்களா? நம்பாதவர்கள் எல்லாம் கைவிட்டு விடுவார்களா? என்ற ஒரு சிந்தனை வினா வரும். அப்படியல்ல யார் யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டே இருக்கிறது. இந்த கடுமையான விதியிலிருந்து ஒருவனை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மை பொறுத்தவரை தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் இது ஒன்றுதான்.
அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல் எந்த சூதுவாது இல்லாமல் சிறு குழந்தை போல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலரும் வெறும் லோகாய விஷயங்களை கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ எனப்படுவோ இல்லை. இது மனிதனின் தேவை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே? என்று யாரும் சிந்தித்து கூட பார்ப்பதில்லை. எனவே இன்று இங்கே எம்முன்னே அமர்ந்து வாழ்க்கை கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை 100க்கு 100 சரியாக புரிந்து கொண்டு சரியான தர்ம வழியில் எவன் ஒருவன் நடக்கிறானோ கட்டாயம் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதை கேட்டாலும் கேட்கா விட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம். செய்து கொண்டிருக்கிறோம். இனியும் செய்வோம். அப்படியெல்லாம் ஏதுமில்லை பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் ஏதும் தீரவில்லை. மறாக கஷ்டங்கள் அதிகமாக இருக்கிறது என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும் ஒன்று பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கு குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்திலே இளமை காலத்திலிருந்து அவன் நடந்து கொண்ட விதத்தை சிந்தித்துப் பார்த்தால் எங்கே குற்றம்? எங்கே குறைகள்? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும். எனவே இறைவன் அருளைக் கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுநூறு எம்மை நம்பி என் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் இறையருளால் நல்ல வழி காட்டுவோம். உலகில் ரீதியாக முன்னேற்றம் காட்டினால் தான் ஒருவனுக்கு நாங்கள் அனுகிரகம் செய்கிறோம் என்பது மிகவும் குறைந்தனமான எண்ணம்.
நன்றாக எமது வார்த்தை கவனித்து பொருள் கொள்ள வேண்டும் எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து பலவிதமான வாக்குகளை கூறி விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும் குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும் குணத்திலும் மனிதனை விட மேம்பட்ட மனிதனாக இருக்கலாம். புனிதனாக இருக்கலாம். இதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்ற வேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கு இட்ட கட்டளை.
ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்ற வேண்டுமென்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கம் ஆக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி அவனை மாமனிதனாக்கி அந்த மாமனித நிலையில் இருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையில் சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ லோகாய கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து என் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தன் ஆக்கி விடுவோம். சித்தனாக்கிவிட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும். அவன் இறையை கூட நாடத் தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்துப் போக வேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
பலர் எண்ணலாம் உலகில் ரீதியான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்ந்த நிலையில் நிம்மதியாக ஒருவன் ஆன்மீகத்தில் வரலாமே? என்று அதை வாதத்திற்கு ஒப்புக் கொள்ளலாமே தவிர நடைமுறையில் அது சாத்தியம் என்று கூற இயலாது. ஏனென்றால் ஒரு மனிதன் ஒரு கஷ்ட நிலையில் இருக்கிறான். இறையருளோ அல்லது எமது வழிகாட்டுதலோ அல்லது இயற்கையாக மாறிவரும் தசா புத்தியாலோ சற்றே மேம்பட்ட ஒரு நிலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக என்னிடம் வந்து குருதேவா முன்பை விட இப்பொழுது நிலைமை உயர்ந்திருக்கிறது. வருமானம் அதிகமாக இருக்கிறது. இந்த உபரி வருமானத்தை என்ன செய்யலாம்? என்று யாராவது கேட்கப் போகிறார்களா? இல்லை. அடுத்தது உலகியல் ரீதியான முன்னேற்றத்தை நோக்கித்தான் மனித மனம் செல்லும். எனவே மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஒவ்வொரு மனிதன் உலகில் உலகியல் ரீதியாக முன்னேற்றம் சுகம் என்று எண்ணுகிறானோ அது வெறும் மாயை கானல் நீர்தான். ஏனென்றால் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு வந்த பிறகு அடுத்த நிலையை நோக்கி அவன் மனம் சென்று விடும். ஏற்கனவே பட்ட கஷ்டத்தை இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கை எத்தனையோ மடங்கு மேல் என்று எந்த மனமும் எண்ணாது. இவைகள் வெறும் வாதத்திற்கு தான் உதவும். உண்மை அது அல்ல.
எனவே எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மனிதன் அன்றாட கடமைகளை செய்வது போல நாங்கள் கூறுகின்ற கருத்தை சிந்தித்துப் பார்த்து தேவையில்லாத விவாதங்களையெல்லாம் குறைத்து தூஷணைகளை எல்லாம் விட்டு பிறர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தி தானுண்டு. தன் கடமையுண்டு. பக்தியுண்டு. தர்மம் உண்டு. சத்தியம் உண்டு என்று என் வழியில் திடமாக வந்து கொண்டே இருந்தால் காலப்போக்கில் அவன் எதையெல்லாம் பிரச்சனை என்று எண்ணுகிறானோ அவைகள் எல்லாம் தீர்ந்தது கூட அவனுக்கு தெரியாமல் அதை தாண்டி அழைத்து வந்து விடுவோம்.
மீண்டும் மீண்டும் நாங்கள் கூறுகின்ற கருத்து இதுதான். சத்தியம் தர்மம் பத்தி இதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டால் எல்லோரும் சுகமாக வாழலாம் ஆசிகள்.