கேள்வி: துன்பங்களிலிருந்து வெளிவருவற்கான வழி என்ன?
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவனின் மாற்று வடிவங்கள் என்பதை உணர்வதும் தனக்குள் உள்ள அண்ட சராசர பேராற்றலை உணர முயல்வதும் தான் துன்பமின்றி வாழ்வதற்கு ஒரு வழியாகும். அதற்கு ஆன்மாவை படிப்படியாக எடுத்துச் செல்வதற்குத்தான் யாம் காட்டுகின்ற வழிமுறைகள் நெறிமுறைகள் பக்தி வழிகாட்டுதல் ஆகமங்கள் தர்ம காரியங்கள். ஆனால் துன்பமில்லாத நிலையென்றால் அங்கு அவன் மனநிலை அதுபோல் மாறிவிடுமே தவிர வாழ்வு நிலை மாறாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு நோக்கமானது மாறிக் கொண்டே இருக்கும். அவன் நிம்மதியை ஒத்திப் போட்டுக் கொண்டே செல்வான். சந்தோஷத்தை ஒத்தி வைப்பது தானே விதியின் வேலை. மாயையின் வேலை. எனவே இவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது தான் மனிதனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதுபோல் ஒரே தினத்திலோ ஒரு சில ஆண்டுகளிலோ இதை செய்ய இயலாது என்பது எமக்கு தெரியும். அந்த ஞானத்தை நோக்கி பயணத்தை துவங்க வைப்பது தான் எமது பணியாக உள்ளது. ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவத்தை குறைத்தால் தான் இதுபோல் விஷயமே அவன் சிந்தனைக்கு எட்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தர்மம் செய்யாமல் ஒருவன் பாவங்களை குறைக்கவே இயலாது. படைப்பெல்லாம் இறைவனுக்கே சொந்தம். இந்த கருத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அசைபோட துன்பங்களிலிருந்து வெளி வருவதற்கான வாய்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் கிட்டும். ஆசைகள் சுபம்.