கேள்வி: பித்ரு தோஷம் என்றால் என்ன? ஒருவனுக்கு ஜாதக ரீதியாக இல்லாமல் பித்ரு தோஷத்தால் என்னென்ன தடைகள் ஏற்படும்? அந்த தடைகளை நீக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
இறைவனின் கருணையை கொண்டு நாங்கள் கூறுவது யாதென்றால் பித்ரு என்ற சொல்லுக்கு முன்னோர்கள் என்ற பொருள் உண்டு. ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவம், அவர்கள் பெற்ற சாபம், அந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீர் கடனை செய்யாது விட்டதால் அவர்களால் வரக்கூடிய தோஷம் என்று பல்வேறு விதமான தோஷங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த பித்ரு தோஷத்தின் அடுத்த உயர்வான நிலைதான் பிரம்மஹத்தி தோஷம். அதன் கிளை தான் நாகதோஷம். எனவே இவையெல்லாம் உச்சகட்ட பாவத்தையும் குறியீடுகள்தான். நாகதோஷம் என்றால் ஏதோ நாகப்பாம்பை கொன்றால் வரும் தோஷம் என்று என்பது ஒரு தவறான நிலையாகும். எல்லா வகையான உச்சகட்ட பாவத்தின் ஒரு அடையாளம் தான் இது போன்ற தோஷத்தின் நாம கரணங்கள் (பெயர்கள்). நாம கரணங்களை விட்டுவிட்டு உச்சகட்ட பாவங்கள் வாழ்க்கையில் பின்னிக் கலந்திருக்கிறது. அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டாலே முதலில் காலபைரவர் வழிபாட்டை துவங்க வேண்டும். அடுத்ததாக பசுக்களை நல்ல முறையில் பராமரிக்கின்ற ஒரு நிலைக்கு தன் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பால்பட்ட ஆலயங்களுக்கு சென்று முடிந்த தொண்டுகளை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தினத்திற்கு உச்சிப் பொழுதிற்குள் ஒரு ஏழைக்காவது அன்னமிட வேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் அன்னமிடுதலை நாங்கள் வரவேற்றாலும் முறையாக அன்னமிடுதல் ஒரு வழக்கம் இருக்கிறது.
அதாவது அதிதியாக வரக்கூடிய மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் தேகமெங்கும் அழுகியிருந்தாலும் அருவருக்கத்தக்க தோற்றம் இருந்தாலும் அவனை அழைத்து அவன் பாதத்தை நன்றாக நீரால் நனைத்து பாத பூஜை செய்து அவனை இல்லத்திலே அமர வைத்து உயர்ந்த மகானோ ஞானியாகவோ வந்தால் என்ன மரியாதையை மனிதன் செய்வானோ அப்படி செய்து இன்முகத்தோடு உணவிடுவதே பரிபூரண அன்ன சேவையாகும். எதோ ஒரு அன்னத்தை வாங்கினோம் இந்தா பிடித்துக் கொள் என்று கொடுப்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் எப்படியாவது செய்கிறார்களே சேய்கள் என்று நாங்கள் சற்றே மனம் மகிழ்ந்து இருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வந்தாலும் அந்த பித்ரு தோஷங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இது ஒரு மனித வாழ்க்கையில் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. செய்தொழில் விருத்தி இல்லாமலும் குடும்பத்தில் குழப்பமும் அதிக மருத்துவ செலவினங்களை ஏற்படுத்திக் கொண்டு நோய் ஒன்று போய் ஒன்று வந்து கொண்டே இருப்பது போல எல்லாவற்றையும் தாண்டி மனக்கிலேசமும் சித்த பிரமையும் குடும்பத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் எனவே இது போல் எளிய வழிபாடுகளையும் தர்ம காரியங்களையும் செய்து ஒரு மனிதன் இந்த தோஷத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வர வேண்டும்.